Home Ads

7/29/2020

THE KATHARINA CODE

                       


*Crime*Thriller*


2019 ஆம் ஆண்டிற்கான   PETRONA AWARD  ( FOR THE BEST SCANDINAVIAN CRIME NOVEL OF THE YEAR)  வாங்கிய நார்வே நாட்டு நாவல் தான் தி கத்தரினா கோட்.

இந்நாவலின் ஆசிரியர் JORN LIER HORST யூன் லீர் ஹர்ஸ்ட்  ஏற்கனவே 2016 ஆம் ஆண்டும் THE CAVEMAN என்ற நாவலுக்காக இவ்விருதை வென்றிருக்கிறார்.

*கதை சுருக்கம்*


வில்லியம் விஸ்டிங் நார்வே காவல் துறையில் மாகாண காவல் தலைவராக உள்ளார். அவரிடம் வந்த பெரும்பாலான வழக்குகளில் குற்றவாளிகளை கண்டறிந்து தண்டனை பெற்று வழங்கியுள்ளார். ஆனால் மார்டின் ஹாகன் மனைவி கத்தரினா ஹாகன் காணாமல் போன வழக்கு மட்டும் தீர்க்கப்படாமலே உள்ளது.

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னால்.....மார்டின் நார்வே நாட்டில் சாலை அமைக்கும் நிறுவனத்தில் வேலை செய்கிறார். திருமணம் ஆனவர். அவருடைய அலுவலகத்தில் பணிபுரியும் கத்தரினாவை விரும்புகிறார். எனவே முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு கத்தரினாவை திருமணம் செய்கிறார். இதனால் கத்தரினா மீது முதல் மனைவிக்கு கோபம் உண்டாகிறது........ இருப்பினும் முதல் மனைவி அவ்வபோது இவரது வீட்டிற்கு வந்து போகிறார். 

கத்தரினா கர்பமாக இருப்பதால்  வேலையை விட்டுவிட்டு வீட்டில் இருக்கிறார். மார்டின் வீட்டிலிருந்து சுமார் 8 மணி நேர பயண தூரத்தில் உள்ள அலுவலகத்தில் அங்கேயே தங்கி வேலை செய்கிறார். வார இறுதி நாட்களில் மட்டும் வீட்டிற்கு வருகிறார்.

தினமும் மனைவியிடம் வேலைக்கு செல்வதற்கு முன்னும் வேலை முடிந்து அறைக்கு வந்த பின்னும் தொலைபேசியில் பேசி வந்தார். ஆனால் இன்று காலை தொலைபேசி மணி அடித்தும் கத்தரினா எடுக்கவில்லை. மாலை அறைக்கு வந்து முயற்சி செய்கிறார் அப்பொழுதும் பதில் இல்லாத காரணத்தால் தன் பக்கத்து வீட்டுக்காரனுக்கு தொலைபேசியில் தகவல் தெரிவிக்கிறார். அவர் சென்று பார்க்கும்போது வீட்டில் யாருமில்லை என சொல்கிறார். உடனே காவல்துறைக்கு தகவல் அளிக்கப்படுகிறது. அப்போது இன்ஸ்பெக்டராக இருக்கும் வில்லியம் விஸ்டிங் இந்த வழக்கை விசாரிக்கிறார். மார்டின் வருவதற்கு முன்பாகவே வில்லியம், கத்தரினா தங்கி இருந்த வீட்டிற்கு அருகில் உள்ளவர்களிடம் விசாரிக்கிறார். பக்கத்து வீட்டில் குடியிருப்பவரை விசாரிக்க அவர் தான் கத்தரினா வீட்டிற்கு சென்று பார்த்ததாகவும் அப்போது கத்தரினா வீட்டில் இல்லை என்றும் கூறுகிறார்.

மார்டின் வந்த உடன் கத்தரினா தங்கி இருந்த வீட்டிற்குள் செல்கின்றனர். வீட்டில் கதவு ஜன்னல் என எதுவும் உடைக்கப்படவில்லை. வீட்டிலிருந்த பொருட்கள் எதுவும் திருடப்படவில்லை. சண்டை போடப்பட்டதற்கான தடையமோ இரத்தக்கரையோ எதுவும் இல்லை. கொலை நடந்த மாதிரியோ கொள்ளை நடந்த மாதிரியோ எதுவும் இல்லை. கத்தரினாவின் படுக்கையறையில் சூட்கேஸ் நிறைய துணிகள் எடுத்து வைக்கப்பட்டும், படுக்கைக்கு பக்கத்திலிருந்த மேஜையில் மலர் கொத்துகளும், ஒரு பேப்பரில் சில எண்கள் 206, 613, 148, 701, 404, 49 எழுதப்பட்டிருந்தது. வீட்டிலிருந்த எந்த வண்டியும் காணாமல் போகவில்லை. வீட்டின் பின்புறம் சுமார் பத்து கிலோமீட்டர் சுற்றளவுக்கு பரந்த காடு உள்ளது.  காட்டை ஜல்லடையாக சலிக்க சொல்லி இருந்தார் இன்ஸ்பெக்டர். எந்த தடையமும் கிட்டவில்லை. 

கத்தரினாவை இறுதியாக உயிருடன் நேரில் பார்த்த மினா ருத், கத்தரினா மிகுந்த மன கவலையில் இருந்ததுபோலவும் எதையோ மறைப்பது போலவும் தனக்கு தோன்றியதாக கூறியுள்ளார். இதையெல்லாம் வைத்து கத்தரினா எங்கேயோ செல்ல தயாராகிக் கொண்டிருந்தாரா? என போலீஸ் விசாரிக்கிறது. நாடு முழுவதும் கத்தரினாவின் புகைப்படம் அனுப்பி தேடுகிறது. ஆனால் எங்கேயும் யாரும் அவரை பார்த்ததாக தகவல் வரவில்லை. முதலில் மார்டின் மீது தான் போலீஸ் சந்தேகப்படுகிறது. ஆனால் மார்டின் கத்தரினா காணாமல் போன அன்று நாள் முழுவதும் வேலையில் இருந்துள்ளார். அவருடன் அன்று வேலையில் இருந்தவர்கள் அதை உறுதிபடுத்துகிறார்கள். 

இதனிடையே மார்டினின் பக்கத்து வீட்டுக்காரர் ஏற்கனவே சிறை சென்று வந்தவர் என விசாரணையில் தெரிய வருகிறது. எனவே சந்தேகம் அவர் மீது விழுகிறது. ஆனால் கத்தரினா காணாமல் போன நாள் முழுவதும் நகரத்தில் உள்ள ஒரு கடையில் இருந்ததற்கான ஆதாரம்  கிடைப்பதால் இவன் மீது இருந்த சந்தேகம் நீங்குகிறது. 

மார்டினின் முதல் மனைவியின்  மீது சந்தேகம் விழுகிறது. அவரின் அறைக்கு சென்று வில்லியம் சோதனையிடுகிறார். அந்த வீட்டில் கத்தரினாவின் காணாமல் போன சில பொருட்கள் சிக்குகின்றன. ஆனால் அவையெல்லாம் சில மாதங்களுக்கு முன் காணாமல் போனவை என மார்டின் கூறகிறார். மேலும் கத்தரின் காணாமல் போன அன்றைய தினம் மார்டினின் முதல் மனைவி ஒரு பொது நிகழ்வில் கலந்து கொண்டதற்கான ஆதாரம் கிடைக்கிறது. எனவே இவர் மீதிருந்த சந்தேகமும் நீங்குகிறது.

எந்த தடையமும் இல்லை. யார் மீதும் சந்தேகமும் இல்லை இல்லை. எனவே கத்தரினா தானே விரும்பி ஏதோ ஒரு காரணத்திற்காக யாரிடமும் சொல்லாமல் வெளிநாட்டிற்கு சென்றிருக்கலாம் என சந்தேகிக்கிறது  போலீஸ். வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. காலங்கள் உருண்டோடுகின்றன.

இன்ஸ்பெக்டர் வில்லியம் கேத்ரினாவின் கையெழுத்து என கையெழுத்து நிபுணர்களால் சான்றளிக்கப்பட்ட அந்த பேப்பரிலிருக்கும் எண்கள் என்ன? எதை குறிக்கின்றன அந்த எண்கள்? என ஆராய்கிறார். 

24 ஆண்டுகளாக அந்த பேப்பரிலிருக்கும் எண்களுக்கான அர்த்தம் என்ன என்பதை யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை. எத்தனையோ பெரிய கணித பேராசிரியர்கள், சூப்பர் கம்யூட்டர், என யாருக்கும் அந்த கத்தரினா கோட் புரியவில்லை. எனவே அந்த பேப்பரிலிருக்கும் எண்களுக்கு எந்த அர்த்தமும் கிடையாது, அது ஒரு வெற்று கிறுக்கல் என பலரும் சொல்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் கத்தரினா காணாமல் போன நாள் வில்லியம் மார்டின் வீட்டிற்கு செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். மார்டினும் வில்லியமும் நண்பர்களாக பழகுகின்றனர். இந்த 24 ஆண்டுகளில் மார்டின் மிகவும் நல்லவராகவே வில்லியமுக்கு தெரிகிறார். மார்டின் வேறொரு பெண்ணை திருமணம் செய்யாமல்  தனியாகவே இந்த 24 ஆண்டுகளாக, கத்தரினாவின் நினைவிலேயே வாழ்ந்து வருகிறார்.  

தற்போது நார்வே நாட்டின் மைய காவல் துறை சிசிஜி என அழைக்கப்படும் குளோஸ்ட் கேஸ் குருப் என்ற ஒன்றை ஆரம்பித்து அதில் இதுவரை தீர்வு காணப்படாத ஆனால் தற்போது புதிதாக தடயம் அல்லது ஆதாரம் கிடைத்த வழக்குகளை மறுவிசாரணை செய்ய உத்தரவிடுகிறது. 

இக்குழுவிலிருந்து ஆத்ரியன் ஸ்டில்லேர் என்பவர் வில்லியமை சந்திக்கிறார். 25 ஆண்டுகளுக்கு முன் பணத்திற்காக கடத்த்ப்பட்டு, பணம் கொடுத்தும் விடுவிக்கப்படாத நாதியா க்ரோ வழக்கில் புதிய தடயங்கள் கிடைத்திருப்பதால் மறு விசாரணை தொடங்கி இருப்பதாக சொல்கிறார். 

கடத்தல் காரர்கள் நாளிதழில் உள்ள வார்த்தைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட இரண்டு மிரட்டல் கடிதங்களை அனுப்பி இருந்தனர். அக்கடிதத்தில் உள்ள கைரேகைகளை தற்போது உள்ள புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் கண்டறிந்துள்ளார்கள். அக்கைரேகை மார்டினின் ஹாகனின் கைரேகை. எனவேதான் நான் இங்கே வந்திருக்கிறேன் என ஸ்டில்லர் தெரிவிக்கிறார். 

அப்படி என்றால் மார்டின் 24 ஆண்டுகளாக நடித்திருக்கிறானா?
மார்டின் கடத்தல்காரனா?
மார்டின் கொலைகாரனா?
நாதியாவுக்கும் கத்தரினா காணாமல் போனதுக்கும் என்ன தொடர்பு?கத்தரினா கோட் மூலம் என்ன சொல்ல முயன்றார் கத்தரினா? 
கத்தரினாவுக்கு என்ன ஆபத்து ஏற்பட்டது?
கத்தரினா எங்கே சென்றாள்?
எப்படி சென்றாள்?
உயுருடன் உள்ளாரா? அல்லது
மார்டினால் கொலை செய்யப்பட்டாரா?
எப்படி கொலை செய்யப்பட்டார்?
எங்கே கொலை செய்யப்பட்டார்?
சடலம் எங்கே?
அல்லது கடத்தப்பட்டாரா?
எப்படி கடத்தப்பட்டார்?

என பல கேள்விகளை வாசகனுக்குள் எழுப்பி அதிரடியாக யாரும் எதிர்பார்க்காத முடிவை அளித்துள்ளார் நாவலாசிரியர்.

இறுதி பக்கம் வரை பரபரவென உள்ளது. 



No comments:

Post a Comment

Recent in Food

FlatBook

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vestibulum rhoncus vehicula tortor, vel cursus elit. Donec nec nisl felis. Pellentesque ultrices sem sit amet eros interdum, id elementum nisi ermentum.Vestibulum rhoncus vehicula tortor, vel cursus elit. Donec nec nisl felis. Pellentesque ultrices sem sit amet eros interdum, id elementum nisi fermentum.




Comments

Contact Us

Name

Email *

Message *