Home Ads

8/11/2020

JAR CITY BY ARNALDUR INDRIDASON



ஜார் சிட்டி
அர்னால்துர் இன்திரிதஸன்


இன்ஸ்பெக்டர் எர்லாந்தர் சீரிஸின் மூன்றாவது நாவல்.

2000 ஆம் ஆண்டு ஐஸ்லாந்து மொழியில் மிரின் என்ற பெயரில் வெளியானது. 2005 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் ஜார் சிட்டி அல்லது டெய்ன்டெட் ப்ளட் என்ற பெயரில் மொழி பெயர்க்கப்பட்டது.

எர்லாந்தர்


ஐஸ்லாந்து நாட்டின் தலைநகர் ரேக்ஜவிக். ரேக்ஜவிக் குற்றப்புலனாய்வு பிரிவில் எர்லாந்தர் ஸ்வின்சன் இன்ஸ்பெக்டராக உள்ளார். வயது 50.  பெரும்பாலான ஸ்கேன்டிநேவியன் நாவல்களின் கதாநாயகன்கள் போலவே இவரும் விவாகரத்தானவர். மனக்கவலைகள் பல கொண்டவர். இதய நோயால் பாதிக்கப்பட்டவர்.

எர்லாந்தருக்கு இரண்டு குழந்தைகள். ஒரு மகன். ஒரு மகள். இருவருடனும் எர்லாந்தருக்கு சுமுகமான உறவு இல்லை. மகனும் மகளும் போதைக்கு அடிமையானவர்கள். மகன் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறான். மகள் போதை மருந்து விற்கும் குழுவோடு சுற்றித்திரிகிறாள்.

ஹால்பெர்க்


ரேக்ஜவிக்கிலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் தரைதளத்தில் 70 வயதுடைய ஹால்பெர்க் தனியாக வசித்து வருகிறார். அவர் கத்தியால் குத்தப்பட்டு செத்துகிடப்பதாக போலீசுக்கு தகவல் வருகிறது. 

இன்ஸ்பெக்டர் எர்லாந்தர் அவருடைய டீமோடு வருகிறார். கொலை நடந்த இடத்தில் உள்ள தடயங்களை சேகரிக்கின்றனர். எவனோ வீடு புகுந்து கொள்ளை அடிக்க வந்திருக்கிறான். அவனுடன் ஏற்பட்ட தகராறில் ஹால்பெர்க் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என டீமில் உள்ள அனைவரும் முடிவு செய்கின்றனர். இதை எர்லாந்தரின் மேலதிகாரியும் ஏற்றுக்கொள்கிறார். 

ஆனால் எர்லாந்தருக்கு இம்முடிவில்  உடன்பாடில்லை. காரணம் ஹால்பெர்க்கின் சடலத்திற்கு பக்கத்தில் கிடந்த குறிப்பும் புகைப்படமும் தான். அக்குறிப்பில் "ஐ அம் ஹிம்" (I AM HIM) என எழுதப்பட்டிருக்கிறது. அப்புகைப்படத்தில் ஒரு கல்லறை உள்ளது.

எனவே எர்லாந்தர் ஹால்பெர்க்கின் கடந்த காலம் குறித்தும் குற்றபின்னணி குறித்தும் விசாரிக்க சொல்கிறார். மேலும் அப்புகைப்படத்தில் உள்ள கல்லறையை கண்டுபிடிக்கவும் உத்தரவிடுகிறார். விசாரணையில் ஹால்பெர்க்கிற்கு மனைவி, குழந்தை, குடும்பம் என்று எதுவும் கிடையாது என தெரிகிறிது. 

கல்லறை


ஹால்பெர்க் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக பல வருடங்களுக்கு (1962ல்) முன் ஒரு பெண் புகார் அளித்திருக்கிறார் என்பது வெளிச்சத்திற்கு  வருகிறது. ஆனால் காவல் துறை அப்புகார் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை. 

எர்லாந்தர் அந்த புகாரில் உள்ள பெயர் மற்றும் முகவரியைக் கொண்டு அப்பெண்ணை கண்டுபிடிக்கிறார். தற்போது அப்பெண் உயிருடன் இல்லை. அவருக்கு ஒரு பெண் குழந்தை இருந்திருக்கிறது. அக்குழந்தை மிகவும் அரிதான மூளை கட்டி நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்திருக்கிறது. 

இதனிடையே எர்லாந்தரின் மகள் போதை பார்டியில் ஏற்பட்ட தகராறில் தாக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கிறாள். அப்போது கர்பமாக உள்ளதை அறிகிறாள். எனவே கருவில் வளரும் குழந்தையின் நலனுக்காக போதை பழக்கத்தை விட்டுவிடுகிறாள். தந்தையின் வீட்டில் வசிக்கத் துவங்குகிறாள்.

பல நாள் தேடலுக்கு பின் புகைப்படத்தில் உள்ள கல்லறையை காவல் துறை கண்டுபிடிக்கிறது. எர்லாந்தர் கல்லறையை தோண்டி எலும்புகளை எடுத்து உடற்கூறு ஆய்வு செய்ய அனுப்புகிறார்.

இந்த எலும்புகள் ஒரு பெண் குழந்தையுடையது என்றும் அக்குழந்தை இறந்த பிறகு மூளையை எடுத்து விட்டு புதைத்திருக்கிறார்கள் என்றும் உடற்கூறு ஆய்வு செய்த மருத்துவர் சொல்கிறார். இக்குழந்தையும் ஹால்பெர்க் மீது புகார் அளித்த பெண்ணின் குழந்தையும் ஒன்றுதான் எனவும் இக்குழந்தையின் தந்தை ஹால்பெர்க் எனவும் மருத்துவ முடிவுகள் சொல்கின்றன.

பல வருடங்களுக்கு முன் ஹால்பெர்க் செய்த தவறுக்காக இப்போது அவனை யார் கொலை செய்தது?
ஏன் மூளையை எடுத்துவிட்டு  குழந்தையை புதைத்திருக்கிறார்கள்?
ஐ அம் ஹிம் -ன் பொருள் என்ன?

ஜார் சிட்டி 


மருத்தவ ஆராய்ச்சிக்காக மனித உறுப்புக்களை பதப்படுத்தி வைத்திருக்கும்  இடத்திற்கு ஜார் சிட்டி என்று பெயர்.

ரேக்ஜவிக் மருத்துவக் கல்லூரி ஜார் சிட்டியில் குழந்தையின் மூளை இருக்கலாம் என உடற்கூறு ஆய்வு செய்த மருத்துவர் சொல்கிறார்.

பல ஆண்டுகளுக்கு முன் இம்மருத்துவமணையில்தான் அப்பெண் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் குழந்தையின் மூளை இங்கே இல்லை. குழந்தை குறித்த வேறு எந்த தகவலும் இங்கே இல்லை. ஒருவேளை அக்குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவருக்கு சில தகவல்கள் தெரியலாம் என அவர் முகவரியை தருகின்றனர்.

எர்லாந்தர் அம்மருத்துவரை அவருடைய இல்லத்தில் சந்திக்கிறார். அப்பெண் குழந்தை மரபணு நோயினால் ஏற்பட்ட மூளை  கட்டியினால் தான் இறந்தார். இந்நோய் மரபணு கேரியராக உள்ள தந்தை அல்லது தாயிடமிருந்து மகன் அல்லது மகளுக்கு வரும்.

இந்நோயின் மரபணு கேரியர்கள் மட்டுமே பல ஆண்டுகள் உயிர் வாழ முடியும் மற்றவர்கள் சிறு வயதிலேயே இறந்துவிடுவார்கள். அதாவது மரபணு கேரியர்களின் வாரிசுகளும் மரபணு கேரியர்களாக இருந்தால்தான் உயிர் வாழ முடியும் அவ்வாறு கேரியர்களாக இல்லாதவர்கள்  சிறு வயதிலேயே இறந்துவிடுவார்கள்.

இந்நோய் குறித்து ஆய்வு செய்ய மூளையை நான்தான் என்னுடைய வீட்டு ஜார் சிட்டியில்  வைத்திருக்கிறேன். இக்குழந்தையின் தந்தை மரபணு கேரியர் என தன்னுடைய ஆய்வின் முடிவை சொல்கிறார் மருத்துவர்.

அப்படியானால் ஹால்பெர்க் ஒரு மரபணு கேரியர்.
இந்த பெண் குழந்தைக்கும் கொலைகாரனுக்கும் என்ன தொடர்பு?
இவ்வளவு நாள் கழித்து இப்போது ஏன் கொலை செய்யவேண்டும்?
கொலைகாரன்  ஐ அம் ஹிம்  என்று ஏன் எழுதினான்?

போன்ற கேள்விகளுக்கு நாம் எதிர்பார்க்காத அதிர்ச்சி அளிக்கின்ற பல உண்மைகளை வெளியே கொண்டுவந்து விடையளிக்கிறார் அர்னால்துர் இன்திரிதஸன்.

கொசுறு


ஐஸ்லாந்து நாட்டில் மரபணு ஆராய்ச்சி மையம் என்ற ஒன்று உள்ளது. இங்கே மரபணு முலமாக கடத்தப்படும் நோய்கள் குறித்தும் அதற்கான சிகிச்சை முறைகள் குறித்தும் ஆய்வு நடக்கிறது. இம்மையத்தில்  ஜஸ்லாந்து நாட்டு குடிமக்களின் மருத்துவ தகவல்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு மரபணு குழாமும் மரபு வரிசை ஆய்வு தரவு தளமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சில குற்றங்கள் வெளிச்சத்திற்கு வரும்போது அதன் நிழலில் மறைந்திருக்கும் மற்ற தவறுகளும் வெளிச்சத்திற்கு வரும். அதனால் ஒரு குடும்பம் பல ஆண்டுகளாக மறைத்து வைத்திருக்கும் ரகசியம் வெளிப்படுகிறது.  வெளிச்சத்திற்கு வந்த ரகசியம் எத்தனை உயிர்களை காவு வாங்குகிறது  என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இந்நாவலின் வழியே ஐஸ்லாந்து நாட்டின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் சமகால வாழ்க்கை முறையையும் நிலவியலையும் காலநிலையையும் அறிந்து கொள்கிறோம். மரபணு சோதனையின் முக்கியத்துவத்தையும் அது எவ்வாறு ஐஸ்லாந்து நாட்டு கலாச்சாரத்திற்கு ஒத்துப்போகிறது என்பதை அறியலாம்.

மொத்தத்தில் சுவாரசியமான நாவல்.

No comments:

Post a Comment

Recent in Food

FlatBook

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vestibulum rhoncus vehicula tortor, vel cursus elit. Donec nec nisl felis. Pellentesque ultrices sem sit amet eros interdum, id elementum nisi ermentum.Vestibulum rhoncus vehicula tortor, vel cursus elit. Donec nec nisl felis. Pellentesque ultrices sem sit amet eros interdum, id elementum nisi fermentum.




Comments

Contact Us

Name

Email *

Message *